மாணவர்களுடன் நடைபெற்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையை உருவாக்கியது
‘பரிக் ஷா பே சர்ச்சா’ எனப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி, கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் கலந்துரையாடுகிறார். தேர்வுகளை மன அழுத்தமின்றி கற்றலின் விழாவாக கருத வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மைகவ் (MyGov) இணையதளத்தில் ஒரு மாதத்துக்குள் 3.53 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். மேலும், நிகழ்ச்சியை 21 கோடி பேர் பல்வேறு ஊடகங்கள் மூலம் பார்வையிட்டனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையதளத்தில் ஒரே மாதத்தில் அதிகமான பதிவு பெற்ற நிகழ்ச்சியாக இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், கின்னஸ் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதி ரிஷிநாத், உலக சாதனை சான்றிதழை வழங்கினார். இதன் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதின் பிரசாதா மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.