பிஹார் SIR விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் அவசியம்: கார்கே உறுதி
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவேண்டும் என இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கார்கே கூறியதாவது:
“பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால், சிறுபான்மையினர், தலித் மக்கள் மற்றும் ஆதிவாசிகள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். எனவே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். இதற்கான உறுதிப்பாட்டுடன் இண்டியா கூட்டணி நிற்கிறது.
மக்களின் வாக்குரிமை தவறவிடப்படக்கூடாது என்பதற்காக, சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த சிறப்பு தீவிர திருத்தம், வாக்குரிமையை அபகரிக்கின்ற முயற்சியாகவே அமைகிறது” என அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திர அரசியல் சாசன அமைப்பாக இருப்பதால், அதன் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை துணைத் தலைவரும் கூறியதைக் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த கார்கே,
“சூரியனின் கீழ் உள்ள எல்லாவற்றையும் பற்றியும் விவாதிக்கலாம். எனவே, இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும் விவாதிக்க முடியும். அவர்கள் தனிநபர்களின் குடியுரிமையை சந்தேகிக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தில் விவாதம் அவசியம். இதை வலியுறுத்தும் எங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமின்றி வெளியிலும் தொடரும்.
வரும் ஆகஸ்ட் 11ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி, இண்டியா கூட்டணியின் பேரணி நடைபெறும்” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ(எம்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதற்கு முந்தைய நாளில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி, டெல்லியில் இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்றது, இதில் கூட்டணியிலுள்ள எம்பிக்கள் பங்கேற்றனர்.