டெல்லி எம்எல்ஏக்களுக்கு ஐபோன் 16 புரோ – சமூக வலைதளத்தில் பொதுமக்கள் ஆவேசம்

டெல்லி சட்டசபையின் 70 உறுப்பினர்களுக்கும் ஐபோன் 16 புரோ, ஐபேட் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காகிதமில்லா டிஜிட்டல் சட்டசபை’ என்ற முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆத்திரத்துடன் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

NeVA என அழைக்கப்படும் தேசிய இ-விதான் செயலியின் கீழ் இந்த திட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. அந்த அடிப்படையில், முதல்முறையாக சட்டசபை கூட்டத்திற்குப் பங்கேற்ற உறுப்பினர்கள் புதிய டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லி சட்டசபைக்கு தேவையான மின்சாரம் முழுவதுமாக சோலார் எனர்ஜி மூலம் பெறப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மற்றும் முழுமையாக டிஜிட்டல் மயமான முதல் சட்டசபையாக டெல்லி மாற்றமடைந்துள்ளது.

மத்திய அரசின் NeVA திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை மாதம் டெல்லி எம்எல்ஏக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஸ்மார்ட் மைக், வோட்டிங் பானல், என்.எஃப்.சி அடையாள சோதனை, பல மொழி ஆதரவு, ஐபேட் மூலம் கோப்புகள் மற்றும் ஆவணங்களை உடனடியாக பார்க்கும் வசதி உள்ளிட்ட பல டிஜிட்டல் அம்சங்கள் அறிமுகமாகியுள்ளன. இவை தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் மக்கள் எதிர்ப்பு

இந்த செய்தி வெளியானதும், பல சமூக ஊடக பயனாளர்கள் அதற்கு எதிர்வினை தெரிவித்தனர். “எங்களது வரிப்பணமே வீணாகிறது”, “மெயின் இன் இந்தியா திட்டம் எங்கே?”, “டெல்லி மக்கள் எம்எல்ஏக்களுக்கு ஐபோன் 16 புரோ வாங்கித் தந்துள்ளனர் என்று தலைப்பு போடுங்கள்”, “மக்கள் இரண்டு வருட இஎம்ஐக்கு ஐபோன் வாங்கினால், எம்எல்ஏக்கள் இலவசமாக பெறுகிறார்கள்” போன்ற கருத்துகள் வலைதளங்களில் வெளியாகின.

ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில், ஐபோன் 16 புரோவின் 128 ஜிபி மாடலின் விலை இந்திய ரூபாயில் ரூ.1,19,900 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இதில் பாஜகவின் 48 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியின் 22 எம்எல்ஏக்களும் இந்த திட்டத்தின் கீழ் ஐபோன் 16 புரோவை பெற்றுள்ளனர்.

Facebook Comments Box