பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு இதுவரை எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலைக் குறித்து, இன்றைய காலை 9 மணி வரை எந்த அரசியல் கட்சியாலும் எந்தவொரு எதிர்ப்பு அல்லது குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு பரிசீலனையின் கீழ் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் 1,60,813 வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவைப்படின் அவை தொடர்பாக தகவல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று (ஆகஸ்ட் 6) காலை 9 மணி வரை எந்த அரசியல் கட்சியிலிருந்தும் இதுகுறித்து ஆட்சேபனை பதிவு செய்யப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இடம் பெற உரிமை கோருவதற்கோ அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதற்கோ எந்தவொரு மனுவும் அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்படவில்லை.

அதே நேரத்தில், தகுதி வாய்ந்த வாக்காளர்களை சேர்க்கவும், தகுதி இல்லாதவர்கள் பெயரை நீக்கவும், நேரடியாக வாக்காளர்களிடமிருந்து 3,659 உரிமை கோரல் மற்றும் ஆட்சேப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க 19,186 விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இம்மனுக்கள் குறித்து விதிமுறைகளின்படி 7 நாட்கள் முடிவடைந்த பின், உரிய தேர்தல் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டப்படி உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட பின்புதான் ஆகஸ்ட் 1ம் தேதி வாய்மொழி உத்தரவு அடிப்படையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு வாக்காளரின் பெயும் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box