டெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற தமிழக எம்.பி. சுதா மீது நகை பறிப்பு: குற்றவாளி கைது – 4 பவுன் தங்க சங்கிலி மீட்பு
மயிலாடுதுறை மக்களவை தொகுதியைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதா, டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 6.15 மணியளவில், திமுக மாநிலங்களவை எம்.பி. சல்மாவுடன் இணைந்து நடைபயிற்சிக்கு சென்றிருந்தார்.
அப்போது சாணக்யபுரியில் உள்ள போலந்து தூதரகம் அருகே வந்தபோது, ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், எம்.பி. சுதாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதில் சுதா எம்.பிக்கு கழுத்தில் சிறு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக சுதா எம்.பி., மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதம் வழியாக புகார் தெரிவித்தார். பின்னர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
பின்னர் டெல்லி போலீஸார் சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளி ஓக்லா ஹர்கேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த சோனு எனப்படும் சோஹன் ராவத் என உறுதி செய்யப்பட்டது.
நேற்று மோதிபாக் பகுதியில் பைக்கில் வந்த அவரை, டெல்லி வாகன திருட்டு தடுப்பு பிரிவினர் (AATS) வழிமறித்து கைது செய்தனர். பறிக்கப்பட்ட 4 பவுன் தங்க சங்கிலி அவரிடமிருந்து மீட்கப்பட்டது.
மேலும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வேறு ஒரு திருட்டு வாகனம், 4 செல்போன்கள், திருட்டு சம்பவத்தில் பயன்படுத்திய உடைகள் மற்றும் ஹெல்மெட்டும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சோனுவிற்கு முன்னதாகவும் பல திருட்டு வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்திருந்த இவர், தற்போது எம்.பி. சுதாவிடம் நகை பறித்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.