“நியாயமற்ற நடவடிக்கை” – அமெரிக்காவின் 50% வரி உத்தரவை இந்தியா கண்டித்தது
இந்திய பொருட்களுக்கு மேலதிகமாக 25% வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள உத்தரவை, இந்தியா கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையைக் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா மேற்கொண்டு வரும் எண்ணெய் இறக்குமதி நடவடிக்கைகள் மீது அமெரிக்கா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் இந்த இறக்குமதிகள், நாட்டின் சந்தை நிலை மற்றும் 140 கோடி மக்களின் ஆற்றல் தேவைகளை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
இந்தியா, பிற நாடுகள் போன்று தனது தேசிய நலனுக்காகத் தான் செயல்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா இந்தியாவை மீதான வரியை மேலும் உயர்த்துவது மிகவும் வருந்தத்தக்கது. இது நியாயமற்ற நடவடிக்கை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார்.”
அமெரிக்கா, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிவிதிப்பை ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமல்படுத்தும் என அறிவித்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த பொருட்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த 25% வரியுடன் கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு மொத்தமாக 50% வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த வரி வீதம்:
- சீனாவை விட 20% அதிகம்
- பாகிஸ்தானை விட 21% அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ஆண்டு வர்த்தகம் சுமார் ரூ.8,650 கோடி அளவில் இருக்கும் நிலையில், இந்த உத்தரவு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இந்த புதிய வரிவிதிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.