டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்ட தலைமை செயலக கட்டிடமான ‘கர்தவ்யா பவன்-3’-ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார்
டெல்லியில் கடமை பாதைக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட மத்திய தலைமை செயலக கட்டிடம் ‘கர்தவ்யா பவன்-3’-ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பழைய மத்திய அரசுக் கட்டிடங்களை மாற்றும் நோக்கில், ‘சென்ட்ரல் விஸ்டா’ மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் முன்பே கட்டி முடிக்கப்பட்டது.
ராய்சினா ஹில்ஸ் பகுதியில், நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் உள்ளிட்ட இடங்களில், கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பல மத்திய அமைச்சக அலுவலகங்கள் — சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன், நிர்மன் பவன் போன்ற பழைய கட்டிடங்களில் இயங்கி வந்தன. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் உள்ள புதிய, நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை, கடமை பாதைக்கு அருகே ‘கர்தவ்யா பவன்’ என்ற பெயரில் 10 அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வருகிறது. இவை அனைத்தும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ஆன ‘கர்தவ்யா பவன்-3’ தற்போது முடிக்கப்பட்ட நிலையில், அதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்த புதிய கட்டிடத்துக்கு மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை, ஊரக மேம்பாட்டு துறை, குறு-சிறு-நடுத்தர தொழில் துறை, மத்தியப் பணியாளர் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவை இடம் பெயர உள்ளன.
மோடியின் உரை:
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில், மக்கள் நலனுக்கான திட்டங்களும், வெளிப்படையான நிர்வாகமும் செயல்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “சென்ட்ரல் விஸ்டா திட்டமும், இதர கட்டிட வசதிகளும் நாட்டின் உலகளாவிய பார்வையை பிரதிபலிக்கின்றன. ஆங்கிலேயர் காலத்து பழமைவாய்ந்த கட்டிடங்களில், குறைவான வசதிகளுடன் அலுவலகங்கள் இயங்கி வந்தன. அதனை மாற்றி, பணியாளர்களின் நலனுக்காகவே இந்த கர்தவ்யா பவன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா ஆகிய முயற்சிகளில் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். உற்பத்தி வளர்ச்சியே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். நாட்டின் கனவுகளை நிறைவேற்றும் புது சிந்தனையின் சின்னமாக கர்தவ்யா பவன் அமையும். இது வளர்ச்சி பாதையில் இந்தியாவுக்கு வழிகாட்டும்.
இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியிருக்கின்றன. ஆனால் நாம் மட்டும் முன்னேறாமல் இருந்ததன் காரணங்களை ஆழமாக சிந்திக்க வேண்டிய காலம் இது. தற்போதைய சவால்களை எதிர்கால தலைமுறைக்கு சுமையாக விட்டுச் செல்லக் கூடாது என்பதே நமது பொறுப்பு” என மோடி வலியுறுத்தினார்.