உள் விசாரணை குழுவை எதிர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது: அதிரடி தீர்ப்பு

வீட்டில் பெருமளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவியிலிருந்து நீக்க உள்நிலை விசாரணை குழு பரிந்துரைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. அவரது வீட்டில் கடந்த மார்ச்சில் திடீரென தீ ஏற்பட்டது. அச்சமயம் அவர் இல்லத்தில் இல்லாத நேரம். தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் இருந்த கட்டுமான ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலாகியிருப்பது தெரியவந்தது.

இந்த பணமும், அதனுடன் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்தார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள, அப்போது இந்திய தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா விசாரணை குழுவை அமைத்தார்.

மூவரால் ஆன அந்த குழுவில் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த மே 3ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த அறிக்கையுடன் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதிலையும் இணைத்து, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்காக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதியது. இதை எதிர்த்து யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாசிஹ் அடங்கிய அமர்வு, “உள் விசாரணை குழுவின் அமைப்பும் அதன் செயல்பாடுகளும் சட்டத்துக்கு முரணாக இல்லை” என்று கூறினர்.

மேலும், “தலைமை நீதிபதி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பது அரசியலமைப்புக்கு புறம்பான செயல் அல்ல. எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் சில பரிந்துரைகளும் நாங்கள் வழங்கியுள்ளோம்” என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, உள் விசாரணை குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

Facebook Comments Box