ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வாகனம் கவிழ்ந்த விபத்து: 3 பேர் உயிரிழப்பு; பலர் காயம்
ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டம் பசந்த்கர் பகுதியில், காண்ட்வா அருகே சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த வாகனம் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்; மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து உத்தம்பூர் கூடுதல் எஸ்பி சந்தீப் பட் கூறுகையில்,
“இந்திரை காலை 10.30 மணியளவில் 187-வது பட்டாலியனைச் சேர்ந்த பங்கர் வாகனம், பசந்த்கர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் 23 சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது,” என்றார்.
விபத்துக்குப் பின்னர், மீட்பு குழுக்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரும், உத்தம்பூர் மக்களவை உறுப்பினருமான ஜிதேந்திர சிங், தனது எக்ஸ் கணக்கில்,
“மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் தீவிரமாக உதவ முன்வந்துள்ளனர். தேவையான எல்லா உதவிகளும் வழங்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா,
“உத்தம்பூர் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகத்தை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம்,” எனக் கூறியுள்ளார்.