வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு: சத்தியப்பிரமாண ஆவணத்தில் கையெழுத்திடும் வகையில் தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு கடிதம்
வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதும், தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டதும் தொடர்பாக நீங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய, சத்தியப்பிரமாண ஆவணத்தில் கையொப்பமிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தலைமை தேர்தல் அலுவலர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல்களில் திட்டமிட்டு மோசடி நடைபெற்று வருகிறது” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் அலுவலர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “வாக்காளர் பட்டியல் விதி 3ன் படி தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள்.
இது தொடர்பாக, 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் விதி 20(3)(b)-ன் அடிப்படையில், இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள சத்தியப்பிரமாண அறிக்கையில் கையெழுத்திட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உடனடி பதிலளித்துள்ளது. இதன் மூலம், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்கான முடிவு தற்போது ராகுல் காந்தியின் கையிலுள்ளது.
இதற்குப் பிறகு ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், “தேர்தல் முடிவுகள் திட்டமிடப்பட்டவையாகவே இருக்கின்றன. இதற்கு பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி எடுத்துக்காட்டாகும். தேர்தலுக்கு முன்பு நடத்திய கருத்துக்கணிப்புகளில் 16 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால் வெற்றி 9 இடங்களிலேயே கிடைத்தது.
அதில் வெற்றி வாய்ப்பு இருந்த 7 தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இதை நாங்கள் ஆராய்ந்தோம். இதில், ஒரு மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை எடுத்துப் பார்த்தோம். தேர்தல் ஆணைய தரவுகளின் அடிப்படையில், அந்த தொகுதி மகாதேவ்புரா ஆகும். அந்த பகுதியில் காங்கிரஸ் 1,15,586 வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 2,29,632 வாக்குகளை பெற்றுள்ளது.
மற்ற அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வென்ற நிலையில், இத்தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளோம். இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளோம். இதில் 11,965 வாக்காளர்கள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளனர். 40,009 முகவரிகள் போலியாக உள்ளன. 10,452 பேர் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 4,132 புகைப்படங்கள் பொருத்தமில்லாமல் உள்ளன.
Form 6 ஆவணத்தை தவறாக பயன்படுத்தி 33,692 பேர் புதிய வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர். இது திட்டமிட்ட முறையில் தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். சில இடங்களில் வீட்டு எண் 0 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை அறை வீட்டில் 46 பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர். அந்த இடத்தை நேரில் பார்த்தபோது, யாரும் வசிக்கவில்லை.
கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்களித்துள்ளார். இது மாதிரியான பல மோசடிகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இந்த ஒரு தொகுதியை ஆய்வு செய்ய எங்களுக்கு 6 மாதங்கள் பிடித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்கினால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடிக்கலாம்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள், எனது நீண்டகால சந்தேகமான ‘தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன’ என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் தொடர்பான டிஜிட்டல் தரவுகள் மூலம் இது எளிதில் கண்டறிய முடியும். ஆனால், தேர்தல் ஆணையம் இத்தகைய தரவுகளை வழங்க மறுக்கிறது. இது, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை திருடுகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது. ஜனநாயக அமைப்புகள் தேர்தல் முறையை சீர்குலைக்க பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.