சந்திரயான்-2 எடுத்த புதிய நிலவுப் படம்!

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ச்சியாக பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. தற்போது அது எடுத்துள்ள புதிய புகைப்படங்கள், நிலவைச் சுற்றியுள்ள ஆய்வுகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான செய்தியை இங்கே பார்ப்போம்.

நிலவைப் பற்றிய ஆய்வில் பல நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளுக்கு இணையாக, இந்தியாவும் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்தியாவின் சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 என மூன்று விண்கலங்கள் இதுவரை நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2019ல் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால் அதன் ஆர்பிட்டர் தற்போது நிலவைச் சுற்றியுள்ள நிலையில் செயல்பட்டு வருகிறது. அது தொடர்ந்து நிலவைப் பற்றிய முக்கிய தகவல்களை பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் சந்திரயான்-2, நிலவு பூமிக்கு நெருங்கும் நேரத்தில் அதன் மின்னணுக்களின் அடர்த்தி அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்தது. இந்த தகவல், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவிற்கு பயணம் செய்யும் சூழலில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு துணைபுரிகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒரு விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்தது தொடர்பான புகைப்படத்தை சந்திரயான்-2 தற்போது பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச்சில், Intuitive Machines எனும் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் IM-2 Lunar எனும் லேண்டர் நிலவின் தெற்கு துருவத்திற்கு அனுப்பப்பட்டது. அது வெற்றிகரமாக தரையிறங்கினாலும், சிறிது நேரத்தில் சீரழிந்து பக்கவாட்டாக சாய்ந்து விழுந்தது. இதனால் அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டது.

இந்த லேண்டர் மார்ச் 7-ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 அதன் புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த படத்தை அதன் உயர் தெளிவுத்தன்மையுள்ள கேமரா (Orbiter High Resolution Camera) மூலம் பதிவு செய்ததாகவும், இது விபத்து குறித்த முக்கியமான தகவல்களை அளிக்கின்றதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புகைப்படம் ஜெர்மனியைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது. நிலவில் உள்ள பள்ளங்கள் மற்றும் அவ்வகை பகுதிகளில் லேண்டர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் வழிகள் குறித்து இந்த படங்கள் புதிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன எனக் கூறப்படுகிறது.

ஆனால், சந்திரயான்-2 எடுத்துள்ள இந்த புகைப்படத்தை இஸ்ரோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box