எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் ‘வாக்கு திருட்டு’

கர்நாடகா மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டின் பின்னணியில், ‘வாக்கு திருட்டு’ என்ற தலைப்புச் சொல்லாக எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குள் வரும் மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் பெரும் அளவில் வாக்காளர் பட்டியல் மோசடி நடந்து விட்டது. காங்கிரசின் ஆய்வின்படி, இத்தொகுதியில் 1,00,250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில், 11,965 பேர் இருமுறை பதிவாகியுள்ளனர்; 40,009 வாக்காளர்களின் முகவரி உண்மையல்லாதது; 10,452 பேர் ஒரே முகவரியில் பெயரிடப்பட்டுள்ளனர்; மேலும் 4,132 வாக்காளர் புகைப்படங்கள் பொருந்தாதவை.

மொத்தம் 5 விதங்களில் வாக்கு மோசடி நடந்து உள்ளது: போலியான வாக்காளர்கள், போலியான முகவரிகள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், தவறாகப் பயன்படுத்தப்பட்ட ‘படிவம் 6’ ஆகியவையாகும்.

இந்த மோசடி ஒரு தொகுதியில் நடந்திருக்கின்றது என்றால், நாடு முழுவதும் என்னதான் நடக்கிறது என சிந்திக்க வேண்டும். இளையோர்களின் வாக்குரிமை அத்துமீறப்படுகிறது. யார் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முந்தைய கட்டங்களில் ஆதாரமின்றி இருந்தோம், ஆனால் தற்போது நிச்சயமான ஆதாரங்களுடன் நாங்கள் பேசுகிறோம். நாடு முழுவதும் பல தொகுதிகளில் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளன” என்று கூறினார்.

இக்கூறுகள் எக்ஸ் தளத்தில் பலரின் கவனத்தை பெற்றன. சில மணி நேரத்திலேயே #VoteChori ஹேஷ்டேக் 3 லட்சம் முறைகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இதனுடன், ‘தேர்தல் ஆணையம்’, ‘ராகுல் காந்தி’, ‘வாக்கு திருட்டு’ போன்ற தலைப்புகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்களை பயன்படுத்தி, பலரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வருகின்றனர்.

Facebook Comments Box