இந்தியா, அமெரிக்காவுக்கு 50% வரி விதிக்க வேண்டும்: சசி தரூர்

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவும் 50 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவுடனான உறவை அமெரிக்கா மதிக்கவில்லையா என்பதை நாம் கேட்க வேண்டும். அவர்களுக்கு இந்தியா முக்கியமில்லை என்றால் நமக்கும் அமெரிக்கா முக்கியமில்லை. தற்போது அமெரிக்கா, இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில், நாங்கள் அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கு சராசரியாக 17% மட்டுமே வரி விதித்து வருகிறோம்.

அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு பதிலடியாக நாமும் அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரி விதிக்க வேண்டும். தற்போது அமெரிக்காவுடனான நமது வர்த்தக உறவு 90 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது. இந்த சூழலில் ட்ரம்ப் 50% வரி விதித்திருப்பது, நமது வர்த்தகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பால் வியட்நாம், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நமது போட்டியாளர்கள் தங்கள் பொருட்களை அமெரிக்க சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும். அப்போது, நமது பொருட்களை வாங்க அமெரிக்க நுகர்வோர் தயக்கம் காட்டுவார்கள். இதன் விளைவாக, இந்தியப் பொருட்களின் விற்பனை குறையும்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவை விட சீனாவின் பங்கு இரு மடங்காக உள்ளது. ஆனால், இறக்குமதி தொடர்பான முடிவெடுக்க சீனாவுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு வெறும் 3 வாரங்களே வழங்கப்பட்டது. இதிலிருந்து, இந்தியாவை அமெரிக்கா எந்த நிலைமையில் பார்க்கிறது என்பதை புரிந்து, அதற்கேற்ப நாமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சசி தரூர் கூறினார்.

Facebook Comments Box