அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு அறிவிப்பு
அவசரகால சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 4 வகை மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. மேலும், வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல், இருமல், நாள்பட்ட நுரையீரல் நோயால் ஏற்படும் மார்பு இறுக்கம் போன்ற பிரச்சினைகளை தடுக்கும் இப்ராட்ரோபியம் (Ipratropium) உள்ளிட்ட மருந்துகள் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் அடங்குகின்றன. இவற்றின் விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ. 2.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்த அவசரநிலைகளில் ரத்த அழுத்தத்தை விரைவாகக் குறைக்கவும், அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், கடுமையான இதய செயலிழப்பு ஏற்பட்டபோது பயன்படுத்தப்படும் ஊசி மருந்தான சோடியம் நைட்ரோபுரஸைடு (Sodium Nitroprusside) ஒரு மில்லிக்கு ரூ. 28.99 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டில்டியாசெம் (Diltiazem) காப்ஸ்யூலின் விலை ஒன்றுக்கு ரூ. 26.77 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உச்சவரம்பை மீறி (ஜிஎஸ்டியுடன் சேர்த்து) விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) உத்தரவிட்டுள்ளது.