நாடு முழுவதும் மகிழ்ச்சியோடு ரக்ஷா பந்தன் திருவிழா!
சகோதரர்–சகோதரிகளின் பாசத்தையும் பந்தத்தையும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 9) நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெறுகிறது. சகோதரிகள், சகோதரர்களின் கையில் ராக்கி எனப்படும் புனித நூலை கட்டி, அவர்களின் நலனும் நீண்ட ஆயுளும் வேண்டிக்கொள்வதே இதன் முக்கியத்துவம்.
இந்த பண்டிகை, ஒரே வீட்டில் பிறந்தோருக்கும், பிறக்காதிருந்தாலும் சகோதர, சகோதரிகளாகப் பழகும்வர்களுக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் ஒன்று. உலகளாவிய அளவில் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் தினமாகவும் இது கருதப்படுகிறது.
நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சொந்த மரபுகள், கலாச்சாரங்களைப் பின்பற்றி இந்நாளை வேறுபட்ட முறையில் கொண்டாடுகின்றன. மத்தியப் பிரதேசம், பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் இது “கஜாரி பூர்ணிமா” எனப்படும். அந்நாளில், சகோதரிகள் ராக்கி கட்டி, பரிசுகளைப் பெறும் பழக்கம் உண்டு.
கஜாரி பூர்ணிமாவின் தனித்துவமான மரபுகளில், பெண்கள் வயல்களில் இருந்து மண் பானைகளை கொண்டு வந்து, அதில் பார்லி விதைகளை நட்டு, அரிசிப் பசையால் அலங்கரித்து, ஊர்வலமாகக் கொண்டு சென்று குளம் அல்லது ஆற்றில் மூழ்கடிப்பது அடங்கும். பெண்கள், சகோதரர்கள் மற்றும் மகன்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பதும் வழக்கம். நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், கதை சொல்லல் போன்றவையும் நடக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தின் வாராணசி, மதுரா போன்ற புனித நகரங்களில் விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். தமிழ்நாடு, கேரளாவில் இதே தினம் “ஆவணி அவிட்டம்” என அழைக்கப்படுகிறது. ஒடிசாவில் இது “கம்ஹா பூர்ணிமா” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது; இது சகோதரர் பாசத்துடன், பகவான் பாலபத்ரரின் பிறந்தநாளையும் நினைவுகூர்கிறது. ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு சடங்குகள் நடைபெறும். அங்கு, தேவி சுபத்ரா, தன் சகோதரர் ஜெகந்நாதருக்கு ராக்கி கட்டும் சடங்கும் உள்ளது.
ராஜஸ்தானில், “லும்பா ராக்கி” எனப்படும் தனித்துவமான ராக்கிகள், சகோதரர்களுக்கு மட்டுமல்ல, அண்ணியார்களுக்கும் கட்டப்படும். இவை ராஜஸ்தானின் வளமான கைவினைப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் மணிகள், கண்ணாடிகள், எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்படும். குஜராத்தில், “பவித்ரோபனா” எனப்படும் சிறப்பு வழிபாட்டு முறையுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது; பக்தர்கள் சிவலிங்கத்திற்கு தண்ணீர் வழங்கி, பாவநிவிர்த்தி வேண்டுகிறார்கள்.
உத்தரகண்டில், ரக்ஷா பந்தன் “ஸ்ரவாணி” மரபுகளுடன் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் கங்கை போன்ற புனித நதிகளில் நீராடி, முனிவர்களை வணங்கி, புதிய புனித நூலை அணிவது வழக்கம்.