‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு: கர்நாடகா தேர்தல் ஆணையர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி விழிப்பூட்டல்
கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் ஒரே வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி மேற்கொண்ட குற்றச்சாட்டிற்கு தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2024-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ சம்பவங்கள் நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை எழுப்பினார். இதற்காக தேர்தல் ஆணையம் அவரிடம் உறுதிமொழி பத்திரம் கோரியிருந்தது.
ராகுல் காந்தி மொத்தம் ஐந்து விதங்களில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி இணையவழி பிரச்சாரத்தை முன்னெடுத்து, பொதுமக்கள் இணையவும் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து கர்நாடக வாக்காளர் பட்டியலில் தவறுகள் நடந்ததாகவும் சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்தது தொடர்பான குற்றச்சாட்டிற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய ஆவணங்கள் தேர்தல் அலுவலர் வழங்கியவையாக இல்லை என்றும், தேவையான ஆதாரங்களை வழங்குமாறு ஆணையர் கேட்டுள்ளனர்.
முன்னதாக, ராகுல் காந்தி தனது எக்ஸ்தளத்தில், “வாக்கு திருட்டு என்பது ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு விரோதமானது. நியாயமான தேர்தலுக்காக வெளிப்படைத்தன்மையும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலை சுயமாக கண்காணிக்க முடியும். எங்கள் இந்த முயற்சியில் ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். votechori.in/ecdemand அல்லது 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்யுங்கள். இந்த போராட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது” என தெரிவித்துள்ளார்.