குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி சார்பில் ஒருங்கிணைந்த வேட்பாளர்; கட்சித் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை…

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில் ஒரே பொதுவேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். 22ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. வேட்பாளர் தேர்வுக்கான அதிகாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் வழங்கப்பட்டது. பாஜக தரப்பில் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. 13 முதல் 20ஆம் தேதி இடையில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுபுறம், இண்டியா கூட்டணியின் உயர் நிலைக் கூட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாடு, பிடிபி, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) உள்ளிட்ட 25 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் கார்கே, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து, அனைவரின் விருப்பத்தையும் கேட்டு ஒருமித்த கருத்தின் பேரில் வேட்பாளர் தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.

பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே, இண்டியா கூட்டணியின் வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: “எங்கள் கூட்டணியின் வேட்பாளரே வெற்றிபெறுவார். அனுபவமிக்க, மாநிலங்களவையை திறம்பட நடத்தக் கூடிய நபரை தேர்வு செய்கிறோம். பல முன்னாள் ஆளுநர்கள், நாடாளுமன்ற அனுபவமிக்க தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் எனப் பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைப் போல, துணைத் தலைவர் வேட்பாளரும் ஆச்சரியம் தருவார்” என தெரிவித்தனர்.

வாக்கெடுப்பு நடைமுறை:

மாநிலங்களவை செயலாளர் பி.சி. மோடி, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளர் கரிமா ஜெயின் மற்றும் மாநிலங்களவை செயலக இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் உதவி அதிகாரிகளாக உள்ளனர்.

வேட்பாளர்கள், குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிவுடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களே வாக்களிக்க முடியும். தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும்; அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். தற்போதைய காலியிடங்களால் 782 பேர் மட்டுமே வாக்களிப்பர். வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. பாஜக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள், இண்டியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்கள் உள்ளதால், பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Facebook Comments Box