‘வாக்கு திருட்டு’ பிரச்சாரம்: புதிய இணைய தளம் அறிமுகம் – தேர்தல் ஆணையம் மீது மீண்டும் குற்றச்சாட்டு எழுப்பிய ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் மீது மீண்டும் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக புதிய இணைய தளத்தை தொடங்கி, பொதுமக்கள் இந்த பிரச்சாரத்தில் இணைவதை வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெருமளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், பலரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாஜகவுடன் தேர்தல் ஆணையம் சேர்ந்து பல்வேறு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது.

நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “வாக்கு திருட்டு என்பது ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற ஜனநாயக அடிப்படை விதிக்கு நேரான தாக்குதலாகும். தெளிவான வாக்காளர் பட்டியல்தான் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யும். தேர்தல் ஆணையம் வெளிப்படையான முறையில் செயல்பட வேண்டும். மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.

அத்தகைய கோரிக்கையை வலுப்படுத்த, அவர் ‘http://votechori.in/ecdemand’ என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தியதுடன், 96500 03420 என்ற எண்ணையும் வெளியிட்டார். இணைய தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்; செல்போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளவும் முடியும்.

“இந்த இயக்கம் நமது ஜனநாயகத்தை காப்பாற்றவே நடத்தப்படுகிறது” என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். இணைய தளத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்போன் எண், மின்னஞ்சல், மாநிலம் மற்றும் தொகுதி போன்ற விவரங்கள் பதிவாகும்.

இதற்கிடையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், ஆதாரங்களை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.

Facebook Comments Box