ட்ரம்ப் 2-வது ஆட்சிக் காலத்தில் இதுவரை 1,700 இந்தியர்கள் நாடு திருப்பி அனுப்பப்பட்டனர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவரம் மற்றும் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது ஆட்சி காலத்தில் இதுவரை 1,703 இந்தியர்கள் நாடு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1,562 பேர் ஆண்களும், 141 பேர் பெண்களுமாவர்.
மாநில வாரியாகப் பார்க்கும்போது, பஞ்சாபில் இருந்து 620 பேர், ஹரியானாவில் இருந்து 604 பேர், குஜராத்தில் இருந்து 245 பேர், தமிழ்நாட்டில் இருந்து 17 பேர் விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். 2009 முதல் 2024 வரை மொத்தம் 15,564 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதால், அமெரிக்கா சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, விசா வழங்கும் நடைமுறைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.