புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்
புதிய வருமான வரி மசோதா இன்று மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் மேற்கொண்ட அமளியின் போது, இந்த மசோதா விவாதமின்றி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. பழைய சட்டத்தில் உள்ள பல சிக்கலான நடைமுறைகளை எளிமைப்படுத்தி புதிய வருமான வரி மசோதா 2025-ஐ பிப்ரவரி 13-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது, இந்த மசோதாவில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதற்கிடையில், 31 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு, 4,500 பக்கங்களைக் கொண்ட புதிய வருமான வரி மசோதா 2025-க்கு 285 பரிந்துரைகள் வழங்கியது.
பரிந்துரைகளில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்தும் வரிவிலக்கு வழங்க வேண்டும், வரி செலுத்துவோர் ITR தாக்கல் தேதிக்கு பிறகும் எந்த அபராதமும் இல்லாமல் TDS பணத்தை திரும்பப் பெற அனுமதி பெற வேண்டும் போன்றவை அடங்கும். இந்த பரிந்துரைகள் பெரும்பாலும் உள்ளடக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.