மேலும் 476 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

பதிவு செய்யப்பட்டாலும் அங்கீகரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 29-ஏ படி தேசிய/மாநில/பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் படி, கட்சி பதிவு பெற்ற பிறகு சின்னம், வரி விடுபடுதல் போன்ற பல சலுகைகள் மற்றும் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகளின் பதிவுகளுக்கான விதிமுறைகளின் படி, 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் பங்கேற்காத கட்சிகள் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. இதன் பகுதியாக, தேர்தல் ஆணையம் விரிவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்காக நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் கண்டறிந்து, அவற்றை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக, கடந்த 9-ந் தேதி 334 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதனால், இந்தப் பட்டியலில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எண்ணிக்கை 2,854-இல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது. இரண்டாம் சுற்று நடவடிக்கையாக, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேலும் 476 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் கண்டறியப்பட்டுள்ளன.

எந்த அரசியல் கட்சி பட்டியலில் இருந்து முறையற்ற முறையில் நீக்கப்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, அந்தக் கட்சிகளுக்கு தங்கள் நிலையை விளக்க வாய்ப்பு வழங்கப்படும். மாநில தலைமை தேர்தல் அலுவலர்களின் அறிக்கையின் அடிப்படையில், எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box