ஆதாரங்கள், உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்கவும்: ராகுல் காந்திக்கு 3 மாநில தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம்

‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி, ஆதாரங்களையும் சட்டப்படி உறுதிமொழிப் பத்திரத்தையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

கடந்த வாரம், ராகுல் காந்தி, “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டன. கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியிலும் இதேபோன்று வாக்கு திருட்டு நடந்தது” என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மூன்று மாநில தேர்தல் அதிகாரிகள், “உங்கள் குற்றச்சாட்டு உண்மை எனில், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு ஆதாரங்களை வழங்கவும்; இல்லையெனில் நாட்டின் மக்களிடம் மன்னிப்பு கேட்கவும்” என்று வலியுறுத்தினர்.

மகாதேவபுரா தொகுதியில், 2024 மக்களவைத் தேர்தலின்போது, ஒரே பெண் இருமுறை வாக்களித்ததாக ராகுல் காந்தி கூறி, அந்தப் பெண்ணின் வாக்காளர் அட்டையை ஆதாரமாக காட்டினார். இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி வி. அன்புகுமார், விசாரணையில் அந்த பெண் ஒருமுறை மட்டுமே வாக்களித்ததாகவும், ராகுல் காட்டிய ஆவணம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்படாததாகவும் தெரிவித்தார்.

மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கமும், ஹரியானா தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசனும், 10 நாட்களுக்குள் ஆதாரங்களும் உறுதிமொழிப் பத்திரமும் வழங்குமாறு ராகுலுக்கு அவகாசம் வழங்கியுள்ளனர்.

போலி ஆவணங்களை காட்டி குற்றம் சாட்டியதாக நிரூபிக்கப்பட்டால், பிஎன்எஸ் சட்டம் பிரிவு 337-ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட வாய்ப்பு உண்டு. குற்றம் உறுதியாகின், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments Box