குடியுரிமைக்கு ஆதாரமாக ஆதாரை ஏற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஒப்புக் கொண்டது
பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில், “5 கோடி வாக்காளர்கள் தங்கள் இந்திய குடிமகன்கள் என்பதை 2.5 மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே ஆதாரை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதி” என வாதிடப்பட்டனர்.
இதற்கு பதிலாக தேர்தல் ஆணையம், “வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை போன்ற ஆவணங்களை குடியுரிமை சான்றாக ஏற்க முடியாது. ஏனெனில் இவைகளில் போலிகள் அதிகம் உள்ளன” என்று தெரிவித்தது.
நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி வழக்கை கேட்டு, “ஆதார் அட்டை குடியுரிமை சான்று கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம். மனுதாரர்கள் தரப்பில் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையம் தயார் இருக்க வேண்டும்” எனக் கூறினர். வழக்கு விசாரணை தொடர்கிறது.
மேலும், மும்பை உயர் நீதிமன்றம் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாபு அப்துல் ரூப் சர்தார் வழக்கில் ஜாமீன் மனு மறுத்து, “ஆதார், பான், வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்கள் ஒருவரை இந்திய குடிமகனாக மாற்றாது. இவை அடையாள ஆவணங்கள் மட்டுமே” என உத்தரவிட்டுள்ளது.