டெல்லியில் கடந்த ஏழு மாதங்களில் 26,000-க்கும் அதிகமானோர் நாய்க்கடிக்கு ஆளானது அதிகாரப்பூர்வ தரவுகளில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தெருநாய்களை காப்பகங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை டெல்லி அரசு விரைவில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
தெருநாய் தொல்லை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. டெல்லி மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில், நகரில் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் புகார் அளிக்க, விரைவில் ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் எண் தொடங்கப்படவுள்ளது.
அரசு தரவுகளின்படி, ஜனவரி முதல் ஜூலை வரை 26,334 நாய்க்கடி புகார்கள் வந்துள்ளன. இதில் 9,920 புகார்கள் மாநகராட்சி மருத்துவமனைகளிலும், 15,010 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டில் மட்டும் 68,090 நாய்க்கடி புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் 5,471 ரேபிஸ் தடுப்பூசி டோஸ்கள் மற்றும் 3,736 ரேபிஸ் சீரம் டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஜூலை 31 வரை, 49 வெறிநாய் கடி சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி-ஜூன் காலப்பகுதியில், விலங்குகளால் கடி ஏற்பட்ட 35,198 புகார்கள் உள்ளன.
நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 2024 ஏப்ரல் முதல் 2025 டிசம்பர் வரை 97,994 நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 20 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. 2025 ஜனவரி-ஜூன் காலத்தில் மட்டும் 65,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2023-24-ல் 79,959 நாய்களுக்கும், 2022-23-ல் 59,076 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டது. பிரச்சினையை சமாளிக்க தெருநாய் மேலாண்மை துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், காப்பகங்கள் அமைக்க நிலம் ஒதுக்க நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.