ஆதார் ‘குடியுரிமை’க்கு சான்றாகாது: நீதிமன்றங்களின் வலியுறுத்தல்

இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றமும் மும்பை உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளன.

பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து 11 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில், “சுமார் ஐந்து கோடி வாக்காளர்கள் தங்கள் இந்திய குடிமகனானதை இரண்டு மாதங்களுக்கு குறைவான காலத்தில் நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என வாதிடப்பட்டது.

அதற்கு, தேர்தல் ஆணையம், “மனுதாரர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். வரைவு பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக ஆணையத்தில் புகார் செய்யலாம். தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவை குடியுரிமை சான்றாக கருதப்பட முடியாது; இவ்வாவணங்களில் போலிகள் அதிகம் உள்ளன” என்று பதிலளித்தது.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், “ஆதார் அட்டை குடியுரிமை சான்றாகாது” என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது.

இதேபோல், “ஆதார், பான், வாக்காளர் அட்டை வைத்திருப்பதால் ஒருவரை இந்திய குடிமகனாகக் கருத முடியாது. இவை அடையாள ஆவணங்கள் மட்டுமே” என்று மும்பை உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு, வங்கதேசத்தைச் சேர்ந்த பாபு அப்துல் ரூப் சர்தார் மீது தொடரப்பட்டது. அவர் 2013 முதல் மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசித்து வந்ததோடு, பாபு கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வந்தார். 2024-ல் சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், ஆதார், வாக்காளர் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், வருமானவரி ஆவணங்கள், வங்கி கணக்குகள், மின்கட்டணம், தொழில் உரிமச் சான்று உள்ளிட்ட பல ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார். ஆனால், போலீஸார் அவர் வங்கதேச பிறப்புச் சான்று பெற்றிருப்பதையும், அங்குள்ள உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததையும் நிரூபித்தனர்.

நீதிபதி அமிர் போர்கர் தலைமையிலான அமர்வு, “குடியுரிமை சட்டம் 1955-ல் கூறியுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்களே குடிமகனாகலாம். ஆதார், பான், வாக்காளர் அட்டை இந்திய குடியுரிமையை நிரூபிக்காது” எனவும், மனுதாரரின் ஆவணங்கள் உண்மையா, போலியா என்பதை அதிகாரிகள் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது.

இந்த விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதாலும், அவர் தப்பிச் செல்லும் அபாயம் உள்ளதாலும், ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. குடியுரிமை விவகாரத்தில் ஒரு ஆண்டுக்குள் முடிவு எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

Facebook Comments Box