ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் – 46 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலுள்ள தொலைவிலுள்ள மலைப்பகுதி கிராமத்தில் நேற்று மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில், சிஐஎஸ்எப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: கிஷ்த்வார் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பின் விளைவாக சக்திவாய்ந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலைமை கடுமையாக உள்ளதால், என்டிஆர்எப்-ன் இரண்டு கூடுதல் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த பேரழிவு ஏற்பட்டது. ஜூலை 25-ம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரை செப்டம்பர் 5-ம் தேதி நிறைவடையவுள்ளது. அந்நேரத்தில் அங்கு திரளான பக்தர்கள் கூடியிருந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கான 8.5 கிலோமீட்டர் நடைபயணம் சோசிட்டி கிராமத்திலிருந்தே தொடங்குகிறது. கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் பக்தர்களுக்கான சமூக சமையலறை (லங்கர்) பெரிதும் சேதமடைந்தது. திடீர் வெள்ளம் காரணமாக கடைகள், பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பேரிடர் ஏற்பட்டதும், கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மா, மூத்த காவல்துறை கண்காணிப்பாளருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொண்டார். உயிரிழந்தோருக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்ததுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தில் ஏற்பட்ட இந்த பேரிடர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தகவல் அளித்தார்.

Facebook Comments Box