ஜிஎஸ்டி வரி முறையில் பெரும் சீர்திருத்தம் – தீபாவளி பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இது பொதுமக்களுக்கு வரிச்சுமையை குறைக்கும். உங்களுக்கான தீபாவளி பரிசாக இதை கருதலாம்” என அறிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள ஐந்து நிலை ஜிஎஸ்டி வரி முறையை எளிமைப்படுத்தி, இரண்டு நிலை விகித முறையாக மாற்றும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஜிஎஸ்டி விகித மாற்றம் தொடர்பான மத்திய அரசின் முன்மொழிவு, கவுன்சிலால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு, இந்த நிதியாண்டுக்குள் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பயன் அளிக்கும். குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும். விலை குறைவதால் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்கள்:
- பொருட்களின் வகைப்பாட்டில் உள்ள குழப்பங்களை குறைத்தல்
- துறைகளின் வரி அமைப்பை எளிதாக்குதல்
- வணிகம் செய்வதை சுலபமாக்குதல்
- 2 நிலை எளிய விகித அமைப்பை நோக்கி நகர்தல்
- குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் தனி விகிதம் அமைத்தல்
மேலும், ஜிஎஸ்டி தொடர்பான முரண்பாடுகளை நீக்கவும், பணத்தைத் திருப்பி வழங்கும் செயல்முறையை விரைவாக்கவும், தொழில்நுட்ப அடிப்படையிலான தானியக்க முறையை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
அதே நேரத்தில், கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வில் மத்திய அரசு மாநிலங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும். வரும் வாரங்களில் மாநிலங்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தி, பரந்த ஒத்த கருத்து உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.