ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தால் குழப்பம் ஏற்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் வைத்ததையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் செயலை சட்டவிரோதமாக அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கடந்த மே 13 அன்று அரசியல் மைப்பு சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மத்திய அரசு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வாதத்தில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் இந்த காலக்கெடு நிர்ணயம் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். அதிகாரப் பகிர்வு என்பது அரசியலமைப்பு சட்ட ரீதியாக சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை என பின்னிப்பிணைந்து ஒருங்கிணைந்தே செயல்பட முடியும். கூட்டாட்சியின் அங்கமாக விளங்கும் ஆளுநர்களை அந்நியர்கள் போல பாவிக்கக்கூடாது.

குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் படி மற்ற அமைப்புகளின் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரமும், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரமும் தனித்துவமானது. அதை நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாது. ஆளுநர் தனக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு மசோதாவை அங்கீகரிக்கவோ, நிறுத்தி வைக்கவோ, திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கவோ முடியும். இதற்கு சட்ட ரீதியாக எந்த காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை, உச்ச நீதிமன்றம் தனது விருப்பப்படி காலவரம்புகளை நிர்ணயம் செய்வது அரசியலமைப்பின் வடிவமைப்பையே மாற்றி விடும்.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 142 பரந்த அதிகாரம் கொண்டது என்றாலும், அரசியலமைப்பின் வெளிப்படையான விதிகளை மீற முடியாது. ஒருவேளை உச்சபட்ச அதிகாரம் படைத்த அரசியலமைப்பு சட்ட ரீதியாக பதவி வகிப்பவர்களின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருந்தாலும் அதை நீதித்துறையின் உத்தரவுகள் மூலமாக சரிசெய்ய முடியாது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், ‘‘குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் உரிய அதிகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தமிழகம், தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் அந்தந்த ஆளுநர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலநிர்ணயம் செய்ய எந்த தடையும் இல்லை. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுவோ அல்லது திருத்த மனுவோ தாக்கல் செய்துதான் தீர்வு காண முடியும். குடியரசுத் தலைவரின் கேள்விகள் மூலமாக தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய முடியாது. ஏனெனில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள இந்த கேள்விகளை அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஏற்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்ப வேண்டும்’’ எனக்கூறியுள்ளது.

இந்த வழக்கு ஆக. 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Facebook Comments Box