நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரியின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் திருட்டு – கொல்கத்தா போலீஸ் விசாரணை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரியின் வீட்டிலிருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களும் நினைவுப்பரிசுகளும் திருடப்பட்டன.

புலா சவுத்ரி, 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்த பெருமையுடையவர். பல தேசிய சாதனைகள் படைத்த இவர், மத்திய அரசால் அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேலும், 2006 முதல் 2011 வரை மேற்கு வங்க மாநிலம் நந்தப்பூர் தொகுதியின் எம்எல்ஏவாகவும் பணியாற்றியவர்.

அவரது மூதாதையர் வீடு கொல்கத்தா கஸ்பா பகுதியில் உள்ளது. தற்போது அங்கு யாரும் வசிக்கவில்லை; அவரது சகோதரர் மிலன் சவுத்ரி அந்த வீட்டைப் பராமரித்து வருகிறார்.

சமீபத்தில் மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்தம் செய்யச் சென்றபோது, பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, புலா சவுத்ரியின் பத்மஸ்ரீ விருதோடு சேர்த்து ஏராளமான பதக்கங்களும் நினைவுப்பொருட்களும் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவரது அர்ஜுனா விருது மற்றும் டென்சிங் நோர்கே பதக்கம் மட்டும் மர்ம நபர்களால் விட்டுச் செல்லப்பட்டிருந்தது.

இதையடுத்து புலா சவுத்ரி போலீசில் புகார் அளித்தார். அவர் கூறியதாவது:

“நான் வாழ்நாளில் வென்ற பதக்கங்களும் நினைவுப்பொருட்களும் அனைத்தும் திருடப்பட்டுவிட்டன. அவற்றின் மூலம் எந்த பணமும் கிடைக்காது; ஆனால் எனக்கு அது அரிய பொக்கிஷம். என் வீடு வெறிச்சோடியதால் அடிக்கடி திருட்டுகள் நடக்கின்றன” என்றார்.

இதுகுறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது புலா சவுத்ரி வீட்டில் நடக்கும் மூன்றாவது திருட்டு சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box