பிஹாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார நடைபயணம் : தொடக்க விழாவில் லாலு பிரசாத் யாதவ் கொடியசைப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 17) பிஹாரின் சசாரமில் இருந்து தனது 16 நாள் ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார்.

இந்த நடைபயணம் 1,300 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் நடைபெறும் மெகா பேரணியுடன் நிறைவடைகிறது. நிறைவு விழா பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நடைபயணத்தைப் பற்றிய தனது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி,

“16 நாட்கள். 20+ மாவட்டங்கள். 1,300+ கி.மீ தூரம் – வாக்காளர் உரிமை நடைபயணத்துக்காக நாங்கள் மக்களிடம் வருகிறோம். இது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான ‘ஒரு நபர் – ஒரு வாக்கு’ என்பதை பாதுகாப்பதற்கான போராட்டம். அரசியலமைப்பை காப்பாற்ற பிஹாரில் எங்களுடன் இணைந்திடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த யாத்திரை இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக இருக்கும் எனக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறினார். அவர்,

“ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் ஜனநாயகத்தில் புதிய பக்கங்களைத் திறக்கிறது. இந்த நடைபயணம் நம் இருப்புக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய கட்டமாக இருக்கும்” என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கொடியசைத்து நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் உரையாற்றியபோது,

“வாக்கு திருட்டால் அல்ல, நேர்மையால் நாங்கள் அரசாங்கம் அமைப்போம். வாக்குரிமை இன்றி இந்த நாடு வாழ முடியாது. அதைக் காப்பாற்ற நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்றார்.

தொடக்க விழாவுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ்,

“ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாங்கள் ஏற்கனவே பல தியாகங்கள் செய்துள்ளோம், எதிர்காலத்திலும் செய்வோம். எங்கள் வாக்குரிமையை அழிக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் தற்போதைய சூழ்நிலை அவசரநிலையை விட மோசமாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி எங்களுடன் இருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது உரையில்,

“ஒவ்வொரு பிஹாரியனும் வாக்களிக்கக் கூடிய சூழல் உருவாகும் வகையில் இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது” என்று கூறினார்.

Facebook Comments Box