புகார் மனு அளிக்க வந்தவர் தாக்குதல் – டெல்லி முதல்வர் ரேகா குப்தா காயம், போலீஸ் விசாரணை தீவிரம்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது, குறைகேட்பு கூட்டத்தின் போது புகார் மனு அளிக்க வந்த நபர் தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு குறித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று, தனது இல்லத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்திய ரேகா குப்தாவைச் சந்திக்க, குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா வந்தார். ஆரம்பத்தில் மனு அளிக்க வந்ததாகக் கூறிய அவர், முதல்வரை நெருங்கிப் பேசியபின் திடீரென திட்டி, கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து, தள்ளி வீழ்த்தியும் தலைமுடியை இழுத்தும் தாக்கினார்.

உடனடியாக பாதுகாப்பு பணியாளர்கள் விரைந்து வந்து ராஜேஷை கட்டுப்படுத்தினர். அவர் கைது செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், முதல்நாளிலேயே அவர் முதல்வர் இல்லம் சுற்றுவட்டாரத்தைப் பார்த்து வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இது திட்டமிட்ட தாக்குதல் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து பாஜக தலைவர் ஹரிஸ் குராணா, “இந்த தாக்குதல் அரசியல் நோக்கத்துடன் நடந்ததா என்பதை விசாரிக்க வேண்டும்” என்றார். டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்ஷா, “எதிர்க்கட்சியினர் பொறுக்கமுடியாமல் இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ளனர். உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்றார்.

அதேபோல், முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான ஆதிஷி, “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, ராஜேஷின் தாய் பானு, “என் மகன் நாய்களை நேசிப்பவர். தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், அதில் அவர் கோபமடைந்தார். அதற்காகவே டெல்லி சென்றார்” என கூறினார்.

Facebook Comments Box