டி.கே. சிவகுமார்தான் அடுத்த முதல்வர் எனப் பேசிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் நோட்டீஸ்!
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்தான் அடுத்த முதல்வர் ஆவார் எனக் கூறிய சன்னகிரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்காவுக்கு, மாநில காங்கிரஸ் ஒழுக்கக் குழு காரணம் கூற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில மாதங்களாகவே கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து அரசியல் விவாதம் எழுந்திருந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டுக் காலாவதியையும் நிறைவு செய்வார் என்று காங்கிரஸ் தலைமை பலமுறை உறுதி செய்தது.
இந்நிலையில், தாவங்கேரியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பசவராஜு, “டிசம்பர் மாதத்திற்குப் பிறகு டி.கே. சிவகுமார் முதல்வராகப் பொறுப்பேற்பார்” எனக் கூறி மீண்டும் விவாதத்துக்கு தள்ளினார்.
இதையடுத்து, மாநில காங்கிரஸ் ஒழுக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிவேதித் ஆல்வா வெளியிட்ட அறிவிப்பில், “சிவகங்கா எம்எல்ஏ கூறிய கருத்து கட்சிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அது ஒழுக்க மீறலாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஏழு நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.
முன்னதாக, இதே விஷயத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவகுமார், “முதல்வர் பதவி அல்லது பிற உள்கட்சிப் பிரச்சினைகள் குறித்து எம்எல்ஏக்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கத்தை மீறி தேவையற்ற கருத்து கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார்.