பரசுராம்புரி எனப் பெயர் மாற்றம் பெறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை ஒப்புதல்

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜலாலாபாத் தாலுகாவின் பெயர் இனி பரசுராம்புரி என மாற்றப்படுகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஷாஜஹான்பூர் மாவட்டம் உ.பி.யின் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த மாவட்டத்தின் ஜலாலாபாத் என்ற தாலுகாவின் பெயரை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதை ஏற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜூன் 27 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது.

அந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், உ.பி. தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி அனுமதி அளித்துள்ளது. அதில், “உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தின் பெயரை ‘பரசுராம்புரி’ என மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அனுமதிக்குப் பிறகு, பிலிபித் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் மத்திய அமைச்சரான ஜிதின் பிரசாத் நன்றியை தெரிவித்துள்ளார்.

தன் சமூக ஊடக பதிவில் அவர், “ஷாஜஹான்பூரில் உள்ள ஜலாலாபாத் நகரத்திற்கு ‘பரசுராம்புரி’ எனப் பெயர் மாற்றம் அனுமதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நன்றி. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கும் நன்றியும் வணக்கங்களும். இந்த முடிவு சனாதன சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்று. பரசுராமரின் திருவடிகளில் கோடி வணக்கங்கள். உங்கள் அருளாலும் ஆசீர்வாதத்தாலும் தான் இந்த புனிதப் பணியில் நான் பாலமாக இருந்தேன். உங்கள் ஆசீர்வாதம் என்றும் நிலைக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி தொடர்கிறது. அத்துடன், மாநிலத்தில் பல நகரங்களும் மாவட்டங்களும் முஸ்லிம் பெயர்களிலிருந்து மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box