“குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஏன் ஒப்புக்கொண்டேன்?” – சுதர்சன் ரெட்டி விளக்கம்
“நான் அரசியல்வாதி அல்ல. அதே நேரத்தில், குடியரசு துணைத் தலைவர் பதவியும் ஒரு அரசியல் பதவி அல்ல. அதனால்தான் அந்தப் பதவிக்குப் போட்டியிட ஒப்புக்கொண்டேன்” என இண்டியா கூட்டணி வேட்பாளர், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, என்.சி.பி. தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கும் கலந்து கொண்டார்.
பின்னர், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசிய சுதர்சன் ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அரவிந்த் கேஜ்ரிவால் தனது பிரதிநிதியாக சஞ்சய் சிங்கை அனுப்பினார். அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதனால் நன்றியைச் சொல்லவே அவரை நேரில் சந்தித்தேன்.
கடந்த இரண்டு நாட்களாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் விஷயம் – நான் அரசியல்வாதி அல்ல, குடியரசு துணைத் தலைவர் பதவி அரசியல் பதவி அல்ல. இது ஒரு உயர் அரசியலமைப்பு அலுவலகம்; சுயாட்சி, பாரபட்சமின்மை, நியாயம் ஆகிய குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். அது நீதிபதிக்குரிய குணங்களே. அதனால்தான் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியிட சம்மதித்தேன்.
மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் இதற்கு ஒப்புதல் அளித்ததோடு, தற்போதைய நாட்டின் சூழ்நிலைகளைப் பற்றி ஆழமாக சிந்திக்கத் தூண்டினார். அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாதவன். நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகனாகவே இருப்பேன்.”
இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
“எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆம் ஆத்மி கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர் என்னைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தார். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தேர்தல் உத்திகள் குறித்து ஆலோசித்தோம்.
இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பாக நடைபெறுகிறது; எந்தக் கட்சிக்கும் கொறடா உத்தரவு இல்லை. எனவே, அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன் – சுதர்சன் ரெட்டி சிறந்த நீதிபதியாக இருந்தவர். எந்த அச்சமுமின்றி முக்கியமான தீர்ப்புகளை வழங்கியவர். அவர் அந்தப் பதவிக்கு மரியாதையை ஏற்படுத்துவார். அதனால், அவர் ‘நாட்டின் வேட்பாளர்’ என நான் கூறுகிறேன்” என்றார்.