எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமம்தான்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மக்களை தவறாக வழிநடத்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கிறார் என கூறியுள்ளார்.

பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக உடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, சமம்தான். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளும் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை பிஹாரில் தொடங்கியது.

அனைத்து வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் நியமித்த 1.6 லட்சம் வாக்குச் சாவடி முகவர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வெளிப்படையான முறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

எனவே, வாக்கு திருட்டு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்துவது அரசியல்சாசன சட்டத்தை அவமதிக்கும் செயல். வாக்கு திருட்டு, இரட்டை ஓட்டு போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரமற்றவை. பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொண்ட அனைவரும் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வாக்காளர் பட்டியலை உருவாக்கியது வெற்றிகரமான செயல்.

இது குறித்து சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தவறான தகவல்களை பரப்புவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. பிஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க உரிமை கோரவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுக்கிறது. அதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ளன. 45 நாட்களுக்குள் புகார் மனுக்கள் அளிக்கப்படாமல், ஓட்டு திருட்டு என குற்றம் சுமத்துவது அரசியல் சாசனத்தை அவமதிப்பது போன்றது,” என அவர் கூறினார்.

Facebook Comments Box