குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை, இண்டியா கூட்டணியின் வேட்பாளரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி நேற்று தாக்கல் செய்தார்.

இத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில், தற்போதைய மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, தெலங்கானாவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி இண்டியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்று, நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலர் பி.சி. மோடியிடம் சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது இண்டியா கூட்டணி தலைவர்களும் உடன் இருந்தனர். சுதர்சன் ரெட்டியின் மனுவை இண்டியா கூட்டணி சார்ந்த 20 எம்.பி.க்கள் முன்மொழிந்தும், 20 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தும் இருந்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 25 ஆகும்.

வாக்குப்பதிவு செப்டம்பர் 9-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு, மாலை நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Facebook Comments Box