நாய் அசுத்தம் செய்த உணவு – 84 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கர் மாநிலத்தில், நாய் அசுத்தம் செய்த மதிய உணவை சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலோடாபஜார்-படாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சீர்கேடு ஏற்பட்டது. மதிய உணவுத் திட்ட ஊழியர்கள், நாய் அசுத்தம் செய்த உணவையே 84 மாணவர்களுக்கு கொடுத்ததாக தெரியவந்தது.
இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனடியாக மாணவர்களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டது. சம்பவம் தொடர்பாக அரசின் அலட்சியம் காரணம் எனக் கருதி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தாமாகவே வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாணவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் இழப்பீடாக தலா ரூ.25,000 வழங்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை இனி மாநில அரசு முழுமையான கண்காணிப்புடன் கவனிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.