மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை: அவசர எண்கள் அறிவிப்பு; ஒடிசா, டெல்லி, இமாச்சலிலும் பலத்த மழை

மும்பை நகரமும் அதனைச் சுற்றிய பகுதிகளுக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பால்கர், சிந்துதுர்க், ஔரங்காபாத், ஹிங்கோலி, ஜல்கான், ஜல்னா, நான்டெட், பர்பானி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 மற்றும் 18 தேதிகளில் மகாராஷ்டிரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் மற்றும் துணைநதிகளில் நீர்மட்டம் உயர்ந்ததால், கிருஷ்ணா நதி கரையோரக் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்: “அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும். தேவையாயின் மட்டுமே வெளியேறவும். உங்கள் பயணத்தை முன்னதாக திட்டமிடவும். எங்கள் அதிகாரிகள் எப்போதும் உதவ தயாராக உள்ளனர். அவசரநிலையில் 100 / 112 / 103 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.” என கூறியுள்ளார்.

ஆகாசா ஏர் தனது அறிக்கையில்: “மும்பை, பெங்களூரு, கோவா, புனே பகுதிகளில் பெய்து வரும் மழையால் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயண நேரத்தை அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.” என தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் தெரிவித்ததாவது: “மும்பை முழுவதும் மழை தீவிரமடைந்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.”

ஜம்மு காஷ்மீர்: மோசமான வானிலை மற்றும் கனமழையால், ஜம்மு பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆகஸ்ட் 18ஆம் தேதி அரசு மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களில் கிஷ்த்வார், கதுவா மாவட்டங்களில் நிகழ்ந்த மூன்று மேக வெடிப்புகளில் 68 பேர் பலியாகி, 122 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி: தொடர்ச்சியான மழையால் யமுனை நதி ஆகஸ்ட் 19க்குள் 206 மீட்டர் உயரம் எட்டும் என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. இது அபாய மட்டமான 205.33 மீட்டரை மீறுகிறது.

இமாச்சலப் பிரதேசம்: ஜூன் 20 முதல் பெய்த மழையால் மாநிலத்தில் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 136 பேர் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மேக வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 127 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் 2,201 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 2,550 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. 1,145 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மொத்த இழப்பு ரூ.2,173 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசா: கனமழையால் மல்கன்கிரி, நபரங்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன. கோராபுட் மாவட்டத்தின் காகிரிகும்மா பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் சாலைகள் முடங்கியுள்ளன. நாராயண்பட்னா, தலகுமண்டி பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Facebook Comments Box