ராணுவப் பயிற்சியில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் வீரர்களை வீட்டுக்கு அனுப்பக் கூடாது: உச்ச நீதிமன்றம்

தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி போன்ற பயிற்சி மையங்களில் காயமடைந்து மாற்றுத் திறனாளிகளாக மாறும் துணிச்சல்மிகு இளைஞர்களை வீட்டுக்கு அனுப்பாமல், முப்படை அலுவலகங்களில் உட்கார்ந்து செய்யக்கூடிய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பயிற்சியின் போது ஏற்படும் விபத்துகளால் கை, கால் இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் இளைஞர்கள், ராணுவப் பணியில் சேர்க்கப்படுவதில்லை. 1985 முதல் இன்றுவரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டு, வீடு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம், மருத்துவ சலுகைகள் போன்றவை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: “போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று ராணுவ பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்கள், காயத்தால் மாற்றுத் திறனாளிகளாக மாறினாலும், அவர்களை வீடு திருப்பி அனுப்புவது சரியல்ல. முப்படைகளில் உட்கார்ந்து செய்யக்கூடிய பணிகளை வழங்க வேண்டும். அவர்களுக்கான மருத்துவ செலவுக்காக மாதம் வழங்கப்படும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகையை உயர்த்துவது குறித்து யோசிக்க வேண்டும். மேலும், பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத் திறனாளிகளாக மாறுவோர் அல்லது உயிரிழப்போர் ஆகியோருக்காக காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசும், பாதுகாப்புப் படைகளும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Facebook Comments Box