Bihar SIR: “நீங்கள் ஏன் செயல்படவில்லை?” – அரசியல் கட்சிகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிஹார் அரசியல் கட்சிகள் செயலற்றதாக இருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்கள் அல்லது ஆதார் அட்டை மூலம் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது பெயர்கள் நீக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில், பிஹாரில் உள்ள 12 அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வழிகாட்டல் செய்ய வேண்டும் என நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. முந்தைய விசாரணையில், நீக்கப்பட்ட பெயர்கள் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வாக்காளர் தனது ஆதார் அட்டை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், “பிஹாரில் உள்ள 12 அரசியல் கட்சிகள், படிவம் 6 அல்லது ஆதார் அட்டையுடன் தேவையான படிவங்களை தாக்கல் செய்யவும், மக்களுக்கு உதவவும் வேண்டும். பிஹாரில் 1.68 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத்-லெவல் முகவர்கள் (BLA) உள்ளனர், ஆனால் இதுவரை இரண்டு ஆட்சேபனைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள் செயல்படாத தன்மை ஆச்சரியக்குரியது. பூத்-லெவல் முகவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்கள் மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே ஏன் இடைவெளி வைத்திருக்கின்றனர்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும். வரைவு பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேர் குறித்து, எத்தனை பேர் உயிருடன் உள்ளனர், எத்தனை பேர் முன்வந்து இருப்பிடத்தை மாற்றினர் என்பதை அனைத்து கட்சிகளும் சரிபார்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, வாக்காளர்கள் விடுபட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கட்சிகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை என்று வாதிட்டனர். நீதிமன்றம் இதனை கவனத்தில் கொண்டு, 12 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளையும் வழக்கில் சேர்த்தது.

நீதிபதி சூர்யகாந்த், ஆட்சேபனைகளை தனிப்படியாகவோ அல்லது ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைதாரர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும், அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு இறுதியில் பிஹாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆகஸ்ட் 1 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், இதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகவும், உயிருடன் உள்ளவர்களில் பலர் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Facebook Comments Box