இண்டியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ’பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த முடிவை எடுத்து உள்ளனர்.

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்திய ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கும்போது அதை காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். இந்த தேர்தலில் நாட்டுக்காக நல்ல சேவை செய்யக்கூடிய ஒருவரை தேர்வு செய்தோம்.

எங்கள் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்படுகிறார். பி.சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் முன்னேற்றமான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நீண்ட, புகழ்பெற்ற சட்ட சேவையை அவர் வழங்கியுள்ளார்.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி நிலைப்பாட்டிற்கான துணிச்சலான ஆதரவாளராக அவர் இருக்கிறார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியோர் குறித்து அவர் அர்ப்பணித்த பணியும், அரசியலமைப்பையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்த விதத்தும் அவரது தீர்ப்புகளில் வெளிப்படுகின்றது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு கொள்கை சார்ந்த போர்வகையாகும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் பி.சுதர்ஷன் ரெட்டியை கூட்டு வேட்பாளராக முன்னிலையில் வைத்துள்ளோம். அவர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார்” என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

“ஆம் ஆத்மி கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர்” என திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ’பிரையன் குறிப்பிட்டார்

Facebook Comments Box