ம.பி. கிராமத்தில் தாவூத் கும்பல் தளம்: மறைமுக போதைப்பொருள் ஆலையை புலனாய்வுத்துறை சோதனை

மத்தியப் பிரதேசம், போபால் அருகே உள்ள ஜெகதீஸ்புரா கிராமத்தில் மக்கள் குறைவாக வசித்து வந்தனர். அங்கே எப்போதும் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய வீடு சந்தேகத்துக்கு உள்ளாகியது.

ரகசிய தகவலின் பேரில் வருவாய் புலனாய்வுத்துறை (DRI) அதிகாரிகள் கடந்த 16ம் தேதி அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது 61 கிலோ திரவ மெபட்ரோன் (Mephedrone) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ₹92 கோடி. தெருவோரங்களில் ‘மியாவ்-மியாவ்’ என்ற குறியீட்டு பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது. மேலும், போதை மாத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 541 கிலோ ரசாயனப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆலை மூலம் தயாரிக்கப்பட்ட போதைப்பொருளை நாடு முழுவதும் விநியோகிக்க, தாவூத் இப்ராஹிம், அவன் நெருங்கியவரான சலீம் ‘டோலா’ இஸ்மாயில், மற்றும் உமைத்-உர்-ரகுமான் ஆகியோர் பாகிஸ்தான், துபாய் ஆகிய இடங்களிலிருந்து நிதி அனுப்புவதாக புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சலீம் டோலா, துருக்கியில் இருந்து மும்பை, குஜராத்தில் தாவூத் கும்பலுக்கு உதவி செய்தவர் என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர் இக்பால் மிர்சியின் கூட்டாளி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாலையை பைசல் குரேஷி என்ற குஜராத் நபர் இயக்கியதாகக் கூறப்படுகிறது. இவர் மருந்து உற்பத்தி துறையில் டிப்ளமோ முடித்தவர். இவரது துணை ரசாக் கான் என்பவரும் இதில் ஈடுபட்டிருந்தார்.

ஒரே சோதனையில் ₹100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பனிப்பாறையின் மேல் பகுதி மாதிரியே என்று புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். மேலும் பல இடங்களில் இந்த கும்பல் உற்பத்தி மையங்களை நடத்தி வரலாம் என்பதால், தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Facebook Comments Box