ஆந்திரா – தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்றும் பணி தீவிரம்

ராமாந்தபூரில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி தேர்திருவிழா விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கேபிள் மற்றும் இன்டர்நெட் ஒயர்களை அகற்றும் பணி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த விபத்தில், மின்கம்பத்தில் சுருண்டிருந்த கேபிள், இன்டர்நெட் ஒயர்கள் தேரைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டது. விசாரணையில், அனுமதி இன்றி கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் இன்டர்நெட் நிறுவனங்கள் அரசின் மின்கம்பங்களை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தெலங்கானா அரசுக்கு “அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனம் இதற்கு இடைக்கால தடை கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஹைதராபாத் மட்டுமன்றி தெலங்கானா முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவிலும் திருப்பதி உள்ளிட்ட பல நகரங்களில் மின் கம்பங்களில் உள்ள கேபிள், இன்டர்நெட் ஒயர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Facebook Comments Box