ஆன்லைன் சூதாட்டத்துக்கு 7 ஆண்டு சிறை: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதா இன்று மக்களவையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
ஆன்லைன் சூதாட்டங்களில் ஏராளமான மோசடிகள் நடைபெறுவதால், பலர் தங்கள் சேமிப்புகளை இழந்து, கடன் சுமையால் தற்கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. மாநில சட்டங்களில் இதற்கு தனித்த பிரிவு இல்லாததால் அபராதம் விதிக்கவோ, சிறைத் தண்டனை வழங்கவோ முடியவில்லை. இதனால், சூதாட்டத்தை கட்டுப்படுத்தவோ அல்லது முற்றிலும் தடை செய்யவோ வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
அமைச்சரவை கூட்டம்:
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவும் ஒன்றாகும்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால், ஆன்லைன் விளையாட்டு தளங்கள் சட்டப்பூர்வ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மேலும், டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமல்படுத்தப்படும். இதற்கான கட்டுப்பாட்டு அமைப்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும்.
அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே 7 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் உள்ளன. புதிய மசோதாப்படி இதே விதிகள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் பொருந்தும். அதாவது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஒடிசாவில் ஆறு வழிச் சாலை திட்டத்திற்கு ஒப்புதல்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ராமேஸ்வர் முதல் தாங்கி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
மொத்தம் 110.87 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த சாலைக்கான மதிப்பீட்டுச் செலவு ரூ.8,307.74 கோடி. சாலை கோர்தா, புவனேஸ்வர், கட்டாக் வழியாக அமைக்கப்படும்.
இந்த சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒடிசாவுக்கு மட்டுமல்லாமல் கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் பெரும் பலனளிக்கும். குறிப்பாக, குறைந்த செலவில் சரக்குகளை விரைவாக இடம் பெயர்த்துச் செல்லும் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.