“பதவி நீக்கம் மசோதாவில் ஆரம்பத்தில் பிரதமர் இடம் பெறவில்லை, ஆனால்…” – கிரண் ரிஜிஜு விளக்கம்

பதவி நீக்கம் செய்யும் மசோதாவில் ஆரம்பத்தில் பிரதமர் பதவி சேர்க்கப்படவில்லை; ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததால் பின்னர் சேர்க்கப்பட்டது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், நாட்டின் பார்வையில் வெற்றிகரமாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பார்வையில் தோல்வி அடைந்ததாகவே தெரிகிறது. அரசு இதை வெற்றியாகவே கருதுகிறது. ஆனால் விவாதங்கள் ஆரோக்கியமாக இல்லை.

பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டில் சிக்கி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்கள் பதவியில் தொடர முடியாத வகையில் ஏற்பாடு செய்யும் 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை புரட்சிகரமானவை. பிரதமர் பதவி உட்பட எந்த பதவியும் சட்டத்தின் கீழ் விலக்காக இருக்கக்கூடாது என்பதே நோக்கம்.

இந்த மசோதாவில் இருந்து பிரதமர் பதவியை விலக்கு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை இருந்தது. ஆனால், பிரதமர் மோடி, “நானும் ஒரு குடிமகன் தான்; எனக்கு தனிச்சலுகை இருக்கக்கூடாது” என்று கூறி அந்த பரிந்துரையை மறுத்தார்.

எங்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்தால், பதவியில் இருந்து விலக வேண்டும். அதுவே நெறிமுறைக்கு ஏற்புடையது. எதிர்க்கட்சிகள் உண்மையில் நெறிமுறையை முன்னிலைப்படுத்தியிருந்தால், இந்த மசோதாக்களை வரவேற்றிருப்பார்கள்.

ஆனால், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது உள்துறை அமைச்சர்மீது காகிதங்கள் வீசப்பட்டன. மைக்கைப் பறிக்க முயன்றனர். கைகலப்பு ஏற்பட்டால் அது நாட்டுக்கு அவமானம். கூச்சலிடலாம், ஆனால் எதையும் தொடக்கூடாது என்பதைக் கூறியிருந்தோம். எனினும், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரின் உத்தரவின்படி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர்.

நாடாளுமன்றம் இயங்காமல் போனால் பாதிப்பு எதிர்க்கட்சிகளுக்கே வரும். காங்கிரசுக்கு விவாதத்தில் ஆர்வமே இல்லை. பல எம்பிக்கள் என்னிடம் வந்து, “நாடாளுமன்றம் முடங்குவதால் எங்கள் தொகுதி பிரச்சினைகளை முன்வைக்க முடியவில்லை” என்று வருத்தப்பட்டனர்.

தேசிய நலனுக்காக அரசு மசோதாக்களை நிறைவேற்றும். ஆனால் விவாதமின்றி நிறைவேறுவது நல்லதல்ல. நாங்கள் விவாதத்தில் நம்பிக்கை வைக்கிறோம். கேள்வி கேட்க வேண்டியவர்கள் தப்பித்துவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார் கிரண் ரிஜிஜு.

Facebook Comments Box