வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும்: பிரதமர் மோடி

இந்திய வீரர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் ககன்யான் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இந்தியாவின் விண்வெளி பயணம் வருங்காலத்தில் புதிய உச்சங்களை அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி, சந்திரயான்-3 திட்டம் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தில் காலடி எடுத்து வைத்தது. இதனை நினைவுகூரும் வகையில், 2024ஆம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினம் ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நேற்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,

ஆர்யபட்டா முதல் ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை” என்பதே இவ்வாண்டின் கருப்பொருள் எனக் குறிப்பிட்டார்.

2023ல் நிலவின் தென்துருவத்தில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்திலும் வெற்றி பெற்றோம். இதனால், இத்தொழில்நுட்ப திறன் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது.

சமீபத்தில் நமது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தார். பின்னர் அவர் சந்தித்தபோது, அந்தக் கொடியை காட்டியதை பார்த்து பேரானந்தம் அடைந்தேன்.

இந்தியா உலகின் மிகப்பெரிய விண்வெளி மையமாக உருவெடுத்து வருகிறது. கிரையோஜெனிக் எஞ்சின், மின்சார உந்துவிசை போன்ற தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. ககன்யான் திட்டத்திற்கு அடுத்ததாக, இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்‌ஷஸ்டேஷன்) உருவாக்கப்படும்.

கடந்த 11 ஆண்டுகளில் விண்வெளி துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் விளைவாக 350க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 5 யூனிகார்ன் நிறுவனங்கள் தோன்ற வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுதோறும் 5–6 ராக்கெட்கள் ஏவப்படுகின்றன; இதை 50 ஆக அதிகரித்து, பின்னர் வாரந்தோறும் ஒரு ராக்கெட் ஏவப்படும் நிலைக்கு கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், விண்வெளி தொழில்நுட்பம் மக்களின் வாழ்வை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பசல் பீமா யோஜனா மூலமாக மீனவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றன; பேரிடர் மேலாண்மை திட்டங்களில் புவிசார் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன; பிரதமர் கதி சக்தி திட்டத்திலும் இவை இணைக்கப்படுகின்றன. “வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களைத் தொடும்” என்று அவர் வலியுறுத்தினார்.

விண்வெளி நிலைய மாதிரி அறிமுகம்:

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செயல்படுகிறது. 2022இல் சீனா தனது டியான்காங் நிலையத்தை அமைத்தது. இந்தியா 2035க்குள் தனது பாரதிய அந்தரிக்‌ஷ ஸ்டேஷன் கட்டிக்கொண்டுவரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2028ஆம் ஆண்டில் முதலாவது தொகுதி (PASS-1) விண்ணில் செலுத்தப்படும்; பின்னர் மேலும் 4 தொகுதிகள் ஏவப்படும். மொத்தம் 5 தொகுதிகள் ஒன்றிணைந்த பின், 2035 முதல் இந்தியாவின் விண்வெளி நிலையம் செயல்படத் தொடங்கும். இந்த நிலையத்தின் மாதிரி டெல்லி பாரத் மண்டபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Facebook Comments Box