அரசியலமைப்பு பல சவால்களை எதிர்கொள்கிறது: சுதர்சன் ரெட்டி கருத்து
வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சுதர்சன் ரெட்டி கூறியதாவது:
“உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டேன். அதே உற்சாகம் தான் தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தூண்டுதலாக இருக்கிறது. எனவே, இந்தப் பயணம் எனக்கு புதிதானது அல்ல.
பொருளாதார குறைபாடு குறித்துப் பலரும் விவாதித்து வருகின்றனர். இன்று இந்திய ஜனநாயகத்திலும் அதே நிலைமை உருவாகியுள்ளது. நமது ஜனநாயகத்தில் பிளவு தோன்றி வருகிறது. ஜனநாயகத்தின் வலிமை மெலிந்து வருகிறது. அதேபோன்று அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி. பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நான் களமிறங்குகிறேன். உண்மையைச் சொன்னால், இது எங்களிருவருக்கிடையிலான போட்டி அல்ல. மாறாக, இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல் இது,” என்று அவர் தெரிவித்தார்.