“அரசியலமைப்பை காக்கும் உறுதியுடன் இருக்கும் தலைவர் சுதர்சன் ரெட்டி” – ராகுல் காந்தி
“குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, அரசியலமைப்பின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். சித்தாந்த ரீதியாக நம்மோடு ஒத்த பார்வை கொண்டவர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நேற்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, என்.சி.பி தலைவர் சரத் பவார், திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி,
- “நாட்டில் தற்போது அரசியலமைப்பை தாக்குகிறவர்களுக்கும் அதை பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
- குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி, பல ஆண்டுகளாக நீதித்துறையில், சட்டத்தில் அனுபவம் பெற்றவர்.
- சமூக நீதி, சாதி கணக்கெடுப்பு போன்ற விடயங்களில் தெலங்கானாவில் முக்கிய பங்கு வகித்தவர்.
- அவர் தனது சட்டைப் பையில் எப்போதும் அரசியலமைப்பின் நகலை வைத்திருப்பார்; 52 ஆண்டுகளாக அதையே தன்னுடன் வைத்திருக்கிறார். அனைத்து சட்ட சிக்கல்களுக்கும் பதில் அரசியலமைப்பில்தான் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
- அவர் பரந்த அறிவும், அரசியலமைப்பின் மீது கொண்ட பற்றும், சித்தாந்த ரீதியாக நம்மோடு இருக்கும் எண்ணக்கோணமும், அவரை வித்தியாசமான நபராக்குகிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய அரசியல் நிலையைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி,
- “மன்னர் தனது விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறையில் அடைத்து பதவியிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார். இது பழங்காலத்திற்கு திரும்புவதைப் போலுள்ளது.
- குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது? முந்தைய துணைத் தலைவர் எங்கே போனார்? மக்களவையில் குரல் கொடுத்தவர் இப்போது மவுனமாக இருப்பது ஏன்?
- பிஹாரில் வாக்காளர் உரிமைப் பயணம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. குழந்தைகள் கூட இதைப் பற்றி பேசுகிறார்கள். மக்களிடம் இருந்து உண்மையான விழிப்புணர்வு எழுந்துள்ளது.
- பல மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டன; இப்போது பிஹாரிலும் அதற்கான முயற்சி நடக்கிறது. இதைப் புரிந்துகொள்ள தலைவர்கள் பிஹாருக்கு வர வேண்டும்” என்றார்.
இறுதியாக, “இந்தியா கூட்டணியின் கடமை, நாட்டுக்கு மாற்றுக் கருத்தை வழங்குவதாகும். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நம்மிடம் பிரதிநிதிகள் உள்ளனர் என்பது பெருமை. சுதர்சன் ரெட்டியை ஒருமித்த மனதுடன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் உறுதியுடன் இந்தத் தேர்தலை சந்திப்பார். இதன் மூலம் நம் செய்தி நாடு முழுவதும் சென்றடையும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.