ககன்யானுக்கான முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ
இஸ்ரோவின் முதல் விண்வெளி பயணமான ககன்யானில் செல்ல உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிப்படுத்தும் முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, “ககன்யான் பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையிலும் முழுமையான ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த முயற்சி இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கூட்டு முயற்சியின்படி மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
விண்வெளி பயணத்தில் மேலே புறப்படுவது முதல் பத்திரமாக தரையிறங்குவது வரை எல்லாம் ஆபத்தானதாக இருக்கும். கீழே இறங்கும்போது பாராசூட் சரியான நேரத்தில் திறந்து விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்க வேண்டும். இதற்காக 5 டன் எடையுள்ள போலி குழுக்கள் அனுப்பப்பட்டு, பாராசூட் மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும்.
இந்த நிகழ்வில் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பி.பி. நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் மற்றும் குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி கவுரவித்தார்.
ராஜ்நாத் சிங் கூறியது: “நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களும் நாட்டின் ரத்தினங்கள். இந்தியா விண்வெளியை ஆராய்ச்சிக்கான துறையாக மட்டுமல்ல, நாளைய பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை கவனிக்கும் வகையில் பார்கிறது. சந்திரயான் முதல் மங்கள்யான் வரை, இந்தியா மிக சவாலான இலக்குகளை சாதனைகளாக மாற்றி உலகின் முன்னணி விண்வெளி சக்திகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது.”
இந்த விழாவில் முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.