காசா மக்களுக்கான நிதி வசூல் பெயரில் சிரிய நாட்டு நபர் குஜராத்தில் கைது

காசா பகுதியின் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுகிறோம் என்று கூறி, சிலர் மசூதிகளில் வீடியோ காட்டி நன்கொடைகளை வசூலித்ததாக புகார் கிடைத்தது. இதையடுத்து, குஜராத் அகமதாபாத் நகரின் எல்லிஸ் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த சிரியாவைச் சேர்ந்த அலி மெகாத் அல்-அசார் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அல்-அசார் உட்பட நால்வர் சிரியாவில் இருந்து சுற்றுலா விசா மூலம் அகமதாபாத் வந்திருந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்கி, காசா மக்களுக்காக திரட்டிய நிதியை சொகுசு வாழ்க்கைக்காக பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது மற்ற மூவர் தலைமறைவாக உள்ளனர்; அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த நால்வரும் அகமதாபாத்தில் உளவு பார்த்திருக்கக்கூடும் என்றும், சிலருடன் தொடர்பு வைத்திருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதனால், அவர்கள் எந்த நோக்கத்துடன் குஜராத்துக்கு வந்தார்கள், திரட்டிய நிதி எங்கே அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிய, குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் தேசிய புலனாய்வு அமைப்பும் இணைந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

Facebook Comments Box